பதினாறு வயது நிரம்பிய இந்தச் சிறுமி பிறந்து வன்னி பெருநிலப்பரப்பின் முக்கியமான ஒரு ஊரில். தாய்வழிப் பூர்வீகம் கண்டல் கடல் கொண்ட முன்னரங்கக் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்த கிராமம், போரும் இடப்பெயர்வுகளும் அலைக்கழித்த வாழ்க்கை இவர்களுக்கானது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டபின் இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். வறுமையின் கொடுமையிலும் மனம் தளராது கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் காத்தனர் பெற்றோரும் உற்றோரும். இலங்கையின் ஐம்பதாவது குடியரசு தினமன்று மாலை அந்தக் கிராமத்தில் ஒரு பண்ணையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர் பெற்றோரும் – மற்றோரும். அவர்களுக்கு தேனீர் கொண்டுவந்த இந்தச் சிறுமி அதைக் கொடுத்துவிட்டு திரும்புகையில் வெடிப்புச் சம்பவத்திற்கு உட்படுகின்றாள். இதில் இவளது இடது பாதம் சிதறியது.நிலத்திற்கு கீழ் இருந்தே அந்த வெடிப்பு நிகழ்ந்தது. யாழ் வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை மூலம் அன்று இரவு காலின் மிகுதிப்பகுதி சீர்செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உள சமூக ஆதரவிற்காகவும் சிகிச்சைக்காகவூம் அந்த சிறுமி உளநலப்பிரிவிற்கு அனுப்பப்பட்டாள். (அதனை நேர்த்தியாக இன்றளவிலும் செய்துகொண்டிருக்கின்றோம்.)
அவளது உள உரம் என்பதும் குடும்ப ஆதரவு என்பதும் மிக வலுவாக இருந்தமையால் அவள் மெல்ல மெல்ல மீண்டுகொண்டிருந்தாள். அவளுக்குரிய செயற்கைக் கால் உருவாக்கத்திற்கும் உதவியினை ஏற்படுத்தியிருந்தோம். மீண்டும் அவள் பாடசாலைக்குத் திரும்பினாள். கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வம் குறையாமல் செயற்பட்டாள். எல்லாவிதமான ஓட்டப்போட்டிகளிலும் முதலிடம் பெற்று வந்தாள். இம்முறை நடைபெற்ற ஈட்டியெறிதல்இ குண்டெறிதல் போன்றவற்றில் முதலிடம் பெற்று தன் ஆற்றலை நிருபித்தாள்.
நாம் கிராமத்திற்கு சென்றபோது “இவள் தான் காலைக் கொண்டுபோய் செருகியிருப்பாள்” என்று ஓரிருவர் குற்றம் சாட்டினர். கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இந்த வெடிப்பு சம்பவம் கண்ணிவெடிப்பு ஒன்றினால் ஏற்பட்டதல்ல என்று கூறி நிவாரணம் வழங்க முடியாது எனக் கைவிரித்தது அதிர்ச்சியைத் தந்தது. நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்க பொருளாதார பலமின்மையால் அதற்கும் இயலாமையால் குடும்பம் ஒதுங்கிக்கொண்டது. நீதிக்காக மட்டுமே போராடாமல் வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்வதுதான் சாலச்சிறந்தது என்றாள் அச் சிறுமி.
செயற்கைக் காலின் அழுத்தத்தினால் ஏற்படும் காயங்களால் இன்னமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இச் சிறுமிக்கு இம்மாதம் சத்திர சிகிச்சையொன்று நிகழவுள்ளது. இந்த வருடம் அவள் கடுமையாக முயன்று பரீட்சை எழுதி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்தார். அவள் விரும்பிய மேற்படிப்பினை தொடர்வதற்கு அது வழிசமைத்தது.
வசதியான சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு தங்களுடைய சுமையை குறைக்க விரும்பாமலும் வெளிநாட்டு பண உதவிக்கு காத்திருக்காமலும் ஏதோ வழியில் கூலித் தொழில் மூலம் அவளைப் பாதுகாத்தனர் பெற்றோரும் உற்றோரும். அவளிற்குரிய நீதியை வழங்குவதற்கு சரியான முறையில் வெடிப்புச் சம்பவம் பதியப்படவில்லை. அதனை மீறி நீதித்துறையில் வாதத்தினால் நீதி நிலைநாட்ட பொருளாதாரப்பலம் தேவைப்படும். அது அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கிவிடும்.
மன வலிமையூடன் கூடிய ஆளுமைத் திறன்களின் மூலம் இழப்புக்களைக் கடந்து புத்துணர்ச்சி பெற்று தடைக்கற்களை படிக்கற்களாக்கி வெற்றி பெற்றிருக்கிறாள் இச் சிறுமி. அவள் விரும்பியபடி ஒரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்ற கனவு நிறைவேற சமூக சீர்கேட்டு நிலைமைகளினால் அவள் பாதிக்கப்படுவதிலிருந்து அவளைப் பாதுகாத்து கரைசேர்க்க வேண்டுமென்பதே அவளை வாழ்த்துவதை விட முக்கியமானது. இவளது இந்தக் கதை ஈழத் தமிழினத்தின் இன்றைய அவலநிலையை பல வழிகளிலும் பிரதிபலிக்கின்றது.